#புவியீர்ப்பு_விசையை_கண்டறிந்தது_அர்ஜுனனே

ஓங்கி உயர்ந்த ஒரு கம்பத்தின் மீது ஒரு சக்கரத்தில் பொருத்தப்பட்டு அதிவேகமாக சுழன்று கொண்டிருந்தது அந்த மீன் பொம்மை! அதற்கு கீழே ஒரு கிரிஸ்டல் க்ளியராக ஒரு செயற்கைத் தடாகம் போல ஒரு பெரிய நீர் நிரம்பிய பாத்திரம்.! மேலே தொங்கிக் கொண்டிருந்த அந்த மீன் பொம்மையின் பிம்பம் அந்த தெள்ளிய தடாகத்து நீரில் பிரதிபலிக்கிறது!
போட்டி இது தான்! அந்த மீனுக்கு நேராக இல்லாமல் தரையில் அமர்ந்து வில்லை மேற்புறமாக பிடித்து கீழே நீரில் தெரியும் மீனின் பிம்பத்தை மட்டும் பார்த்து அம்பெய்தி மேலே சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மீனை குறி தவறாமல் அடித்து வீழ்த்த வேண்டும்! பிரட்லீ, ஷோயப் அக்தர், ஷாகின் அஃப்ரீதி, மார்க் வுட்ஸ், மிட்சேல் ஸ்டார்க், போல்ட், டிம் சவுதி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கம்மின்ஸ்..
பும்ரா, புவனேஷ், ஷமி என பல நாட்டு வீரர்கள் முயன்றும் அம்மீனின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை! வந்தார் அர்ஜுனன்! வில்லை அநாசயமாக தூக்கி பின் விரல்களை நமது குல்தீப் யாதவின் சைனாமேன் பொசிஷனில் வைத்து நாணில் அம்பை பொருத்தி ஏய்கிறார்! அறிமுகமான முதல் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மிடில் ஸ்டம்ப் எகிறியது போல..
அர்ஜுனனின் கணையால் தாக்கப்பட்ட மீன் மேலிருந்து அறுந்து கீழே விழ அனைவரும் கரவொலிக்க கிருஷ்ணர் மட்டும் “பார்த்தாயா பார்த்திபா நீ அடித்த அடியில் மீன் கீழே விழுகிறது இதுவே புவியீர்ப்பு விசை என்பதை நோட் பண்ணிக்கோ இல்லாவிட்டால் நாளை இப்பெருமை நியூட்டனுக்கோ அல்லது ஐன்ஸ்டீனுக்கோ போய்விடும் என்று அறிவுறுத்த..
“கண்ணா என் பணி அம்பெய்தி இலக்கைத் தாக்குவதே, அதை செவ்வென செய்துவிட்டேன்.. இந்த புவியீர்ப்பு காரணங்களில் எனக்கு எந்தப் பாராட்டும் வேண்டாம். நாளை கண்டுபிடிக்கப் போகிறவரே அதை செய்ததாக இருக்கட்டும்.! கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என எனக்கு போதித்ததே நீ தானே என்றதும்.. கண்ணன் கதறி அழ அவர் கண்ணீரும் கீழே சிந்த..
“அட மீண்டும் புவியீர்ப்பு விசை” என சபையே கரவொலித்தது!
ஈரேழு பதினான்கு உலகின் நம்பர் 1 எழுத்தாளர்.. வேதப் பேரறிஞர் வெங்கடேஷ் அவர்கள் எழுதிய “மகாபாரதத்தில் மகத்தான அறிவியல்” எனும் “நூலில்” இருந்து …

Comments

Popular posts from this blog

Boost Your Knowledge! DID YOU KNOW?

Gas Pain in Chest: Causes, Treatment, and More