இனிது இனிது வாழ்தல் இனிது! - 36

(கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி!)
‘7 இயர் இட்ச்’ திருமண வாழ்க்கையில் இந்த 3 வார்த்தைகள் மிகவும் பிரபலம். இந்தப் பெயரில் ஒரு ஆங்கில படம் வந்து அந்தக் காலத்திலேயே பெரிய பரபரப்பைக் கிளப்பியது. 1957ல் வந்த இந்தப் படத்தில் மர்லின் மன்றோதான் ஹீரோயின்!
ஹீரோவுக்கு திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் இருப்பார்கள். மனைவி அம்மா வீட்டுக்குப் போயிருப்பார். ஹீரோவின் மாடி வீட்டுக்குக் குடி வருவார் மர்லின் மன்றோ. அவரது அழகும் கவர்ச்சியும் ஹீரோவை கிறங்கச் செய்யும். ஆளில்லாத வீடு, மேல் வீட்டில் அழகான இளம்பெண் என அவருக்குத் தன் இள வயசு செக்ஸ் வாழ்க்கை நினைவுக்கு வரும். அந்தப் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிற மாதிரி கற்பனை செய்வார்.
கதைப்படி ஹீரோ மனநலம் தொடர்பான புத்தகம் ஒன்றை எடிட் செய்து கொண்டிருப்பார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘செவன் இயர் இட்ச்’. அது திருமணமாகி 7 வருடங்களைக் கடந்துவிட்ட நிலையில் மனம் தடுமாறும் ஒருவனைப் பற்றிய கதை. கிட்டத்தட்ட இந்தக் கதையைப் போலவே இருக்கும் ஹீரோவின் நிஜ வாழ்க்கையும்.
ஒருநாள் மேல் வீட்டுப் பெண், ஹீரோவின் வீட்டுக் கதவைத் தட்டுவார். தன் அறையில் ஏசி இல்லை என்றும், ஒருநாள் இரவு ஹீரோவின் வீட்டில் படுத்துக் கொள்ளலாமா என்றும் அனுமதி கேட்பார்.
ஹீரோ தன் மனதுக்குள் எதை எதிர்பார்த்துக் காத்திருந்தாரோ அதுவே நடக்கிறது. ஹீரோயினுக்கு தன் அறையைக் கொடுத்துவிட்டு, தான் வெளியில் படுத்துக் கொள்கிறார். கற்பனையில் நினைத்த சம்பவங்களை நிஜத்தில் நடத்திக் கொள்ள அவனுக்குத் தேடி வந்த வாய்ப்பு அது. ஆனாலும், உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், அவற்றை அடக்கிக் கொள்கிறார்.
அடுத்த நாளே வீட்டைப் பூட்டிக் கொண்டு, தன் மனைவி இருக்கும் இடத்துக்கு விரைவதாக முடியும் கதை. இந்தப் படம் வந்ததும் ‘7 இயர் இட்ச்’ என்கிற வார்த்தை மட்டுமின்றி, தம்பதிக்கிடையிலான பிரிவும் பிரபலமானது. பிரபலமான ஹாலிவுட் ஜோடி ஜெனிஃபர் அனிஸ்டனும் பிராட் பிட்டும் விவாகரத்து செய்ததும் இப்படியொரு 7 வருடங்களுக்குப் பிறகுதான். திருமணமாகி, ஒன்று அல்லது 2 குழந்தைகளைப் பெற்ற, 7 வருடங்களைக் கடந்த தம்பதி மத்தியில் திருமண வாழ்க்கை பற்றிய ஒரு மனக்கசப்பு இருப்பது உலகெங்கிலும் பரவலாகக் காணப்படுகிற விஷயமே.
குழந்தை பிறந்து, ஓரளவு வளர்ந்த பிறகு தம்பதியர் பிரிவதால் பெரிய பாதகங்கள் இருப்பதில்லை. ஆனால், குழந்தை 2 வயதை எட்டுவதற்குள்ளேயே பிரிந்தால், அந்தக் குழந்தை சரியான பராமரிப்பின்றி, வளர்ச்சியின்றி இறந்து போகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. திருமணமான 4 முதல் 7 வருடங்களுக்குள் இந்தப் பிரிவின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், குழந்தைகள் பிறந்ததும் மிக அதிகமாவதும் கூட நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஏன் இந்த 7 வருடக் கசப்பு?
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும், ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும், அந்த நபருடன் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற மனநிலையில் வாழ்வதும் சகஜமாகிவிட்டது. 2 குழந்தைகளைப் பெற்ற நிலையில் தம்பதியரின் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.
நாம் விரும்பியபடிதான் வாழ்கிறோமா? நம் எதிர்பார்ப்புக்கேற்றபடி நம் துணை இருக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. திருமண உறவில் மட்டுமின்றி, வாழ்க்கையின் பல விஷயங்களின் மீதான எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல் இருப்பதை 30 - 35 வயதில் உணர்கிறார்கள். வேலை, பொருளாதார நிலைமை போன்றவற்றில் உண்டாகும் அதிருப்தியை உடனே மாற்றி விட முடிவதில்லை. ஆனால், திருமண வாழ்வில் ஏற்படுகிற அதிருப்தியை, திருமணம் தாண்டிய இன்னொரு உறவின் மூலம் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.
வாழ்க்கையில் முன்னேற முடியாமைக்கு எது காரணம், எங்கே கோளாறு என ஆராய்வதற்கு பதில், எல்லாவற்றுக்கும் தன் திருமண உறவு சரியில்லாததுதான் காரணம் என ஒரு பொதுவான முடிவுக்கு வருவதும், அதிலிருந்து வெளியே வர, இன்னொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதும் பரவலாக நடக்கிறது. இத்தகைய உறவுகள் புத்துணர்வைத் தருவதற்குப் பதிலாக புதுசு புதுசாக பிரச்னைகளையே தரும் என்பதை அறியாதவர்கள் அவர்கள். மிருகங்கள் முத்தமிட்டுக் கொள்வதில்லை. திருமண நாள் கொண்டாடுவதில்லை. காதல் என்கிற அழகான உணர்வை மனிதர்களிடம் மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால், பலருக்கும் அந்த அருமையான உணர்வை அனுபவிக்கக் கொடுத்துவைப்பதில்லை. இருவர் இணைந்து வாழ்வதால் உண்டாகிற லாபங்களையோ, இன்பங்களையோ பார்க்காமல், அதனால் வரும் பிரச்னைகளையும் செலவுகளையும் நினைத்து, திருமண உறவிலிருந்து வெளியே வர நினைக்கிறவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
‘7 இயர் இட்ச்’ என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனாலும், ‘7 இயர் இட்ச்’ பட ஹீரோ மாதிரி இதிலிருந்து மீண்டு வெளியே வருவதும் அப்படியொன்றும் பிரமாத காரியமல்ல. அதற்கு என்ன செய்ய வேண்டும்?
* 20 வயதில் வாழ்க்கை என்பது ஒருவித வேடிக்கையான, விளையாட்டான விஷயமாகத் தெரியும். வயதாக ஆக, அந்த எண்ணம் மாறி, வேலை, குடும்பம், பொறுப்புகளில் மூழ்குவதால் சீரியஸாக மாறும். காலம் கடந்த நிலையில் மறந்து போன அந்த வேடிக்கையை, விளையாட்டைப் புதுப்பிக்க, இன்னொரு உறவைத் தேட வைக்கும். அதைத் தவிர்த்து, தம்பதியருக்குள் சலிப்பை உண்டாக்கும் விஷயங்களை ஆராய்ந்து, அதை சரியாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
* வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். 20 வயதிலிருந்த வாழ்க்கை, 50 வயதில் இருக்கப் போவதில்லை. ஆனாலும், 50 வயதில் வெறும் வேலையில் மட்டுமே கவனமாக இல்லாமல், சுவாரஸ்யமான வேறு சில விஷயங்களையும் கண் திறந்து பார்க்க வேண்டும்.
* தம்பதியருக்குள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வதில்லை என்கிற மன உறுதி இருந்தால், தடம் மாறத் தோன்றாது. புதிதாக இன்னொரு துணையிடம் சாத்தியப்படுகிற அதே சுவாரஸ்யம் தன் கணவன் அல்லது மனைவியிடமும் சாத்தியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* துணையைப் புகழ்வதிலும் பாராட்டுவதிலும் வஞ்சனையே வேண்டாம். புகழவும் பாராட்டவும் காரணங்களையோ, சந்தர்ப்பங்களையோ எதிர்பார்த்துக் காத்திருக்கவும் தேவையில்லை.
* காதலை அடிக்கடி புதுப்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐ லவ் யூ’ சொல்வதிலிருந்து, அன்பளிப்பு கொடுத்து அசத்துவது வரை இதற்கு எந்தவிதமான டெக்னிக்கையும் பயன்படுத்தலாம்.
* அந்தரங்க உறவுக்கும் நெருக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
* மேற்சொன்ன வழிகளில் எளிதாக சீரமைக்கக் கூடிய உறவை, பெரும்பாலான தம்பதியர் துணையின் மீது அதீத கோபம், கவனமின்மை, தான் வைத்ததுதான் சட்டம் என்கிற மனநிலை போன்ற எதிர்மறையான வழிகளால் சீரழிக்கிறார்கள்.
* ஆங்கிலத்தில் agree to disagree என்று சொல்வார்கள். அதாவது, துணைக்கு மாறுபட்ட கருத்து இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் வைத்துக் கொள்வது அவரவர் உரிமை. தனக்காக தன் துணையும் மாறிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையும்.
* 7 வருடங்களில் மனம் மட்டுமில்லை, உடலும் மாற்றம் காண்கிறது. பல தம்பதியரும் அதைக் கவனிப்பதில்லை. குறிப்பாக பெண்கள்... இயல்பான மாற்றங்களினால் ஆண்களை விட பெண்களின் உடல்வாகு சீக்கிரமே மாறிப் போகிறது. அதை அப்படியே அலட்சியப்படுத்தாமல் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள கொஞ்சம் மெனக்கெடலாம். இந்த விதி ஆண்களுக்கும் பொருந்தும்.
* கடைசியாக ஒரு விஷயம்... இந்த மனக் கசப்பு 7 வருடங்களில்தான் நிகழ வேண்டும் என்றில்லை. 7 என்பதொன்றும் மந்திர எண்ணில்லை. திருமண உறவின் எந்த வயதிலும் எட்டிப் பார்க்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வுடன், அதைத் தவிர்க்கத் தயாராக இருக்க வேண்டியது தம்பதியரின் பொறுப்பு.
(வாழ்வோம்)
நன்றி - பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் மற்றும் குங்குமம் தோழி இதழ்
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
See Translation
May be an illustration of 3 people and text that says 'இனிது இனிது வாழ்தல் இனிது! கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி! 36 இருவர் இணைந்து வாழ்வதால் உண்டாகிற லாபங்களையோ, இன்பங்களையோ பார்க்காமல், அதனால் வரும் பிரச்னைகளையும் செலவுகளையும் நினைத்து, திருமண உறவிலிருந்து வெளியே வர நினைக் கிறவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.'
All reactions:
504

Comments

Popular posts from this blog

"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"