பாகவதம் - 1
மாவீரன் அர்ஜுனனின் மருமகளும், அபிமன்யுவின் மனைவியுமான உத்தரை அலறியடித்துக் கொண்டு தன் மாமனாரான அர்ஜுனனிடமும், கிருஷ்ணரிடமும் ஓடி வந்தாள். "கிருஷ்ணா என்னை காப்பாற்றுங்கள்! என் கருவை காப்பாற்றுங்கள்!" என்று அலறினாள்.
கிருஷ்ணர் திடுக்கிட்டுப் பார்த்தார். நெருப்பு கங்குகளுடன் சக்தி வாய்ந்த அஸ்திரம் உத்தரையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
துஷ்டனான அசுவத்தாமன், பாரதப் போரில் கௌரவர்கள் ஜெயிக்க முடியாத காரணத்தால் பாண்டவர்களைப் பழிதீர்க்க வெறியோடு அலைந்து கொண்டிருந்தான்.
ஏற்கனவே பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களும் அவனால் இரவோடு இரவாகக் கொல்லப்பட்டனர். ஆனால் அசுவத்தாமனுக்கு ஆத்திரம் தீரவில்லை. தன் நண்பன் துரியோதனன் போர்க்களத்தில் கோரமாகத் துடிதுடித்து நாதியற்று இறந்ததை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடித்தான்.
பாண்டவர் வம்சம் உயிரோடு இருக்கக்கூடாது என்று வெறி பிடித்தவன் போல அலைந்தான். ஏற்கனவே பாண்டவர் புதல்வர்கள் மாண்டது போதாது என்று, பாண்டவர் வம்சத்தின் கடைசி நம்பிக்கையாக அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் வளரும் கருவைக்கூட உயிரோடு விடமாட்டேன் என்று கொடிய செயலைச் செய்தான்.
இதற்காக அவன் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். பாண்டவர் வம்சத்தையே வேரறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் அந்த அஸ்திரத்தை ஏவியதால், அதற்கு "அபாண்டவீயம்" என்ற பெயரும் உண்டு.
அந்த அஸ்திரம் தான் உத்தரையைத் துரத்திக்கொண்டு சீறி வந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் இதன் அபாயத்தை உணர்ந்து கொண்டார்.
உடனடியாக ஒரு சிறிய ஜோதி ரூபமாகித் தன் தங்கை சுபத்திரையின் மருமகளான உத்தரையின் கருவினுள் சென்றார். அங்கே அந்த அஸ்திரத்தைத் தனது சுதர்சனச் சக்கரத்தின் மூலம் செயலிழக்கச் செய்து குழந்தையைக் காப்பாற்றினார்.
பாண்டவர் குலமே கிருஷ்ணரின் காலில் விழுந்து கதறியது. "எப்பேர்ப்பட்ட உதவியைப் புரிந்தீர்கள் மாதவா! இதற்கு என்ன கைம்மாறு செய்வது?" என்று கண்ணீர் விட்டனர்.
ஸ்ரீ கிருஷ்ணரால் கருவிலேயே காப்பாற்றப்பட்ட அந்த குழந்தை பிறந்ததும் அவனுக்கு விஷ்ணுராதன் என்று பெயர் சூட்டப்பட்டது.
கருவிலேயே அஸ்திரத்தால் தாக்கப்பட்டதால் அவன் உடல் கறுப்பாகப் பிறந்ததாகச் சில பதிப்புகள் உள்ளன.
ஒரு அஸ்திரத்தால் கருவிலேயே பரீட்சித்துப் பார்க்கப்பட்டதால் அவனுக்கு பரீக்ஷித் என்று பெயர் வந்ததாகச் சிலரும், பிறந்ததும் அங்கே இருப்பவர்களை உற்று நோக்கி, "கருவில் என்னைக் காத்த அந்த உருவம் இதுவா? அதுவா?" என்று அனைவரையும் உன்னிப்பாகப் பரீட்சித்துப் பார்த்ததால் பரீக்ஷித் என்று பெயர் வந்ததாகவும் கதைகள் உண்டு.
அவ்வாறு பிறந்த அந்த மன்னன் பாண்டவர்களுக்குப் பின் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை வளமாக ஆண்டு வந்தான்.
கிருஷ்ணரின் மேல் அளவற்ற பக்தி வைத்திருந்தான். பெரும் போருக்குப் பின் மக்கள் நல்ல முறையில் அமைதியாக வாழத் தொடங்கினர். வெயில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்பது போல, மிகப்பெரிய போரினால் ஏற்பட்ட அழிவைப் பார்த்த பின்பு தான் அமைதியான வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது என்பதை உணர்ந்து வாழ்ந்து வந்தனர்.
மன்னனும் மிகச்சிறப்பாக நல்லாட்சி நடத்தி வந்தான். அந்த மன்னனுக்கும் முடிவு நெருங்கியது.
ஒருநாள் படைகளோடு காட்டிற்கு வேட்டையாடச் சென்ற மன்னன் வழிதவறி எங்கோ சென்றுவிட்டான். நீண்ட தூரம் வந்த களைப்பில் தாகம் நாவை வறட்டியது. என்ன செய்யலாம் என்று கடவுளைத் துதித்தபடியே இன்னும் சிறிது தூரம் சென்றதும் அங்கே ஒரு ஆசிரமக் குடில் இருப்பதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்.
அங்கே தனக்குத் தண்ணீர் கிடைக்கும் என்று வாஞ்சையோடு அங்கே சென்று வாசலில் நின்று கூப்பிடுகிறான்.
நீண்ட நேரம் கூவியும் யாரும் வந்து அவனை வரவேற்கவில்லை.
அவனுடைய போதாத காலம், தாகத்தின் காரணமாக அவனுடைய புத்தி மட்டுப்பட்டுப் போயிருந்தது. என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை, கோபம் தலைக்கு ஏறிவிட்டது. உள்ளே சென்று யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான்.
அங்கே சமீக முனிவர் தன்னிலை மறந்து கடும் தவத்தில் இருந்தார். முனிவர் வேண்டுமென்றே தன்னை அவமதிக்கிறார் என்று எண்ணிய மன்னன், வெளியே வாசலில் செத்துக் கிடந்த ஒரு பாம்பை எடுத்து முனிவருக்கு மாலையாக அவரது கழுத்தைச் சுற்றி அணிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான்.
அந்த முனிவரோ இது எதுவும் தெரியாமல் யோகத்திலேயே ஆழ்ந்து கிடந்தார். இந்த நிகழ்வு நடைபெறும் போது வெளியே சென்றிருந்த அந்த முனிவரின் புதல்வன் சிருங்கி, தன் தந்தையின் கழுத்தில் பாம்பு மாலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தன் யோக சக்தியின் மூலம் இதைச் செய்தது மன்னன் என்று அறிகிறான்.
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பழிதீர்க்க, அந்த மன்னனுக்கு 7 நாளில் தக்ஷகன் என்னும் நாகம் தீண்டி அவன் மரணமடைவான் எனச் சாபமிடுகிறான்.
தவம் கலைந்து எழுந்து நடந்த நிகழ்வுகளை அறிந்த முனிவர் துக்கமடைந்தார். "நம் மன்னன் நல்லவன், நல்லாட்சி செய்பவன். தாகம் தீர்க்க வழியில்லாததால் புத்தி கெட்டுப் போய் ஏதோ செய்துவிட்டான். அவனுக்கு இப்படியொரு சாபம் அதிகமானது" என்று மகனைக் கடிந்து கொண்டார். ஆனாலும் சாபத்தை மாற்ற இயலாது என்பதால் அமைதியாக மீண்டும் தியானத்திற்குச் சென்றுவிட்டார்.
தனக்குச் சாபம் கிடைத்த செய்தி மன்னனுக்கு எட்டியது. சிறிது நேரம் அமைதியாக இருந்த அவன், "இதுவும் நல்லதுக்கே" என்று மனதைத் தேற்றிக்கொண்டான். "உலக பந்தங்களிலிருந்து நான் விடுபட இது உதவியாக இருக்கும்" என்று எண்ணி மோட்சத்திற்குத் தயாரானான்.
தன் மகனான ஜனமேஜயனுக்கு முடிசூட்டி அரசனாக்கிவிட்டு, கங்கை கரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கிறான். மன்னரின் முடிவை கேள்வியுற்ற நாரதர், வியாசர் உட்பட பல மாமுனிவர்களும் அங்கே வருகை தந்தனர். மன்னன் அவர்களை வரவேற்றான்.
அப்போது அங்கே மிக உயர்ந்த நிலையில் உள்ள ரிஷியான சுகப்ரம்ம ரிஷி வருகை புரிகிறார். மற்ற முனிவர்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த, மன்னன் அவரின் பாதம் பணிந்து வணக்கம் செலுத்தினான். "மன்னா, உன்னைப் பார்த்தால் துக்கப்படுபவன் போலத் தெரியவில்லை. உன் முகத்தில் தெய்வீகக் கலை தாண்டவமாடுகிறது. அனைத்தும் விதிப்படி நடக்கிறது, கவலை வேண்டாம்" என்றார் ரிஷி.
"மாமுனிவரே! எனக்கு ஒரு கேள்வியுள்ளது. நான் மரணித்தபின் நற்கதி அடைய என்ன செய்ய வேண்டும்?" என்று அவரிடம் பணிவோடு வினவுகிறான் மன்னன். ரிஷி அவனிடம், "பகவான் நாராயணரைச் சரணடை, உனக்கு நற்கதி கிட்டும்" என்று வாழ்த்தினார்.
"ஐயனே! நான் எப்போதும் என் கண்ணனை மறக்கவில்லை. என் வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்துத் தொழுது வந்துள்ளேன். இப்போது என் கடைசி நாட்களில் என் கண்ணனின் பெருமைகளை விளக்கும் பாகவதத்தை எனக்கு விவரிக்க வேண்டும். இதைக் கேட்டுக்கொண்டே என் உயிர் பிரிய நான் ஆசைப்படுகிறேன்" என்று கண்ணீர் மல்கப் பாதம் பணிந்தான்.
முனிவர் அப்படியே ஆகட்டும் என்றார். இவ்வாறு சுகர் மகரிஷி பரீக்ஷித் மன்னனுக்கு அவன் வாழ்நாளின் கடைசி நாட்களில் பாகவதத்தை எடுத்துரைத்தார்.
அந்த ஞானத்தினால் மன்னன் தன் உயிரைத் தானே உடலிலிருந்து விடுவித்துக்கொண்டு பகவானின் பாதங்களை அடைந்தான்.
சாபத்தின்படி ஏழாவது நாள் நாகம் தீண்டி அவன் உடல் மண்ணில் சாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே மன்னன் முக்தி அடைந்திருந்தான்.
சுகர் மன்னனுக்கு சொல்வதாக நமக்கு சொல்லப்பட்டதே பாகவதம் எனப்படும் அந்த கலியுக கடவுள் கிருஷ்ணரின் புராணம். ஆனால் இதில் பகவான் கிருஷ்ணர் பற்றி மட்டுமல்லாமல் பல்வேறு உலகை ரட்சிக்கும் மும்மூர்த்திகளை பற்றியும் வேறு பல்வேறு உபகதைகளும் சொல்லப்படுகின்றன.
இதில் பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையை பற்றி மற்றும் முடிந்தவரை ரத்தின சுருக்கமாக இனி வரும் காலங்களில் கொடுக்க முயற்சிக்கிறேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட் வேண்டுகிறேன். இதிகாசங்களையும் புராணங்களையும் பேசாமல் இருப்பதைவிட சில முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை விவாதித்து திருத்தி கொள்வது சிறந்தது என்பது என் கருத்து.
இவை வெறும் கட்டுக்கதைகள். இவற்றை எழுதக்கூடாது என்று கொக்கரித்தாலும் "சர்வம் கிருஷ்ணர்பனம்" என்று அனைத்தையும் அவனிடம் சமர்பித்துவிட்டு நான் அடுத்த அத்தியாயம் எழுத தொடங்கிவிடுவேன்.
நான் பெரும்பாலும் அதிக வர்ணனைகள் மற்றும் உபகத்தைகளை தவிர்த்து மிக எளிய நடையில் எழுத வேண்டுமென்று முயற்சிக்கிறேன். ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி


Comments
Post a Comment