கருட புராணம் - 5 (இறந்த பின் ஆத்மாவின் பயணம்)

"மனிதன் இறந்ததும் அவன் என்னவாகிறான்? அவன் உயிர் எங்கே செல்கிறது? அந்த உடலுக்கு என்ன ஆகும்? உடலை என்ன செய்ய வேண்டும்? இறந்தபின் ஆத்மா செல்வதாக அனைவரும் கூறும் எமலோகம் என்பது என்ன? அது எங்கே உள்ளது? எவ்வாறு இருக்கும்?" என்று கருடன் வினவினான். அதற்குப் பகவான் கூறிய பதில்களை இங்கே காண்போம்.
"கருடனே! ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் அவன் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறேன், கேள். இறக்கும் தருவாயில் மனிதனின் உடல் பாகங்கள் தன் சக்தியையும் உணர்வையும் இழக்கத் தொடங்கும். இந்த மாற்றம் நிகழாமல் மரணம் சம்பவிக்காது. ஒருவன் தூக்கத்திலேயே இறந்தாலும் கூட, இந்த உணர்வை அனுபவிக்காமல் அவன் உயிர் பிரியாது.
இறக்கும் தருவாயில் எமதூதர்கள் அவன் அருகில் வந்து நிற்பார்கள். உயிர் வெளியேறும் அந்த நேரத்தில், ஆத்மா விழிப்படைந்து தனது உண்மைச் சொரூபத்தை அடைவதால், எமதூதர்கள் அருகே நிற்பதை அந்த ஆத்மாவால் கண்டிப்பாகப் பார்க்க முடியும். மரண தருவாயில் ஒருவன் எமனை நேரில் சந்திப்பான். சில உயிர்களை எமதூதர்கள் அடித்துத் துன்புறுத்துவதையும், சிலரை அவர்கள் நன்முறையில் அழைத்துச் செல்வதையும் அந்த ஆத்மா காணும்."
உடலிலிருந்து உயிர் வெளியேறியதும், அது தெய்வீகப் பார்வைத் திறனைப் பெற்று, பிரபஞ்சம் முழுவதையும் ஒரே நேரத்தில் கண்டுணரும் ஆற்றலைப் பெறுகிறது. உயிரானது கட்டைவிரல் அளவிற்குத்தான் இருக்கும். அந்த உயிரைத் தான் எமதூதர்கள் ஸ்தூல உடலிலிருந்து பறித்துக்கொண்டு எமலோகம் செல்வார்கள். அவ்வாறு வெளியேறிய ஆத்மா, உலக சுகங்களில் திளைத்த ஆத்மாவாக இருந்தால், தான் இதுவரை தங்கியிருந்த உடலைப் பார்த்து கதறி அழும்.
மனைவி, மகன் என யாரும் தீண்டத்தகாதபடி வெறுப்புற்று ஒதுக்கும் பிணமான தன் உடலைப் பார்த்து அது தேம்பி அழுகிறது. 'இதுவரை நான் தங்கியிருந்த இந்த உடல் இனி புழுக்களுக்கு இரையாகப் போகிறதா அல்லது எரிந்து சாம்பலாகி விடுமா?' என்று அந்த ஆத்மா இறுதி தருணம் வரை அழுது கதறிக்கொண்டே இருக்கும்.
தீமைகள் செய்து மரித்தவனின் உயிரைப் பறித்துச் செல்லும் எமதூதர்கள், அவன் நரகத்தில் அனுபவிக்கப் போகும் கஷ்டங்களை வழி முழுவதும் கூறிக்கொண்டே செல்வார்கள். 'தீமை மட்டுமே செய்து வாழ்ந்த நீ, விரைவில் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாய். அங்கே பல கொடிய தண்டனைகள் உனக்காகக் காத்திருக்கின்றன. நீ செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி தண்டனை உண்டு; அவற்றை எதிர்கொள்ளத் தயாராயிரு' என்று எமதூதர்கள் கூறுவார்கள். இதைக் கேட்கும் ஆத்மா கடும் துயரமடைந்து தேம்பித் தேம்பி அழும்.
"ஒருவன் இறந்த நாளில் அவனது புத்திரன் செய்ய வேண்டிய பிண்டங்களையும் சடங்குகளையும் சரியாகச் செய்தால், ஆத்மாவிற்கு ஏற்படும் இந்தத் துயரம் சற்று குறையும்.
கருடனே! இறந்த பின் ஒருவனுக்கு ஐந்து பிண்டங்கள் படைக்கபடுகின்றன.
முதல் பிண்டம்: மரணித்த இடத்திலேயே செய்யப்படுவது; இது அந்த வீட்டிலுள்ள தேவதைகளைத் திருப்திப்படுத்தும் மற்றும் பூமித்தாயை மகிழ்விக்கும்.
இரண்டாவது பிண்டம்: வாசலில் வைக்கப்படுவது. இது நெடும் பயணத்திற்குப் புறப்படும் ஆத்மாவை வழியனுப்பச் செய்யப்படுவதாகும். இது வாசலில் வாசம் செய்யும் தேவதைகளைத் திருப்திப்படுத்தும்.
மூன்றாவது பிண்டம்: தகனம் செய்யும் இடத்தில் செய்யப்படுவது. இது 'கேகரா' என்னும் தேவதையைத் திருப்திப்படுத்தும்.
நான்காவது பிண்டம்: சடலம் இருக்கும் இடத்தில் செய்யப்படுவது; இது பூத தேவதைகளைத் திருப்திப்படுத்தும். இதன் மூலமே இறந்தவனின் ஆத்மா மீது பூதங்கள் சினேகம் கொள்கின்றன. யட்சன், பிசாசு முதலியோர் உடலை அக்னி தேவன் ஏற்றுக்கொள்ளும் படிச் செய்கிறார்கள்.
ஐந்தாவது பிண்டம்: சிதையின் அருகில் செய்யப்படுவது; இதுதான் இறந்தவனை 'பிரேதம்' என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது.
இந்த ஐந்து பிண்டங்களைச் செய்தால் மட்டுமே உடல் தீயில் எரிக்கப்படுவதற்கான தகுதியைப் பெறுகிறது.
பிண்டங்களில் மூன்று வகை பிண்டங்கள் முக்கியமானவை:
இறந்தவுடன் செய்வது, மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் செய்வது, மற்றும் தகனம் செய்யும் இடத்தில் செய்வது. இவை பிரம்மன், விஷ்ணு மற்றும் எம கிங்கரர்களோடு தொடர்புடையவை.
இந்தப் பிண்டங்களைச் செய்த பின்பே புத்திரனோ அல்லது உறவினரோ சிதைக்குத் தீ வைக்க வேண்டும்."
இப்போது எமலோகத்தின் தூரம் மற்றும் அங்குள்ள விதிமுறைகளைப் பற்றிச் சொல்கிறேன் கேள்!
- தொடரும்
சிலரது குடும்பத்தில் பெரியவர்கள் சிலர் மரணிக்கும் தருவாயில் இது போன்று கண்ணுக்குத் தெரியாத உருவங்கள் தன் அருகில் நிற்பதை பார்த்ததாகவும், சிலர் மரணத்தின் தருவாய் வர சென்றோம் என்று திரும்பியதாகவும் பல கதைகள் உண்டு. உங்கள் குடும்பத்தில் நல்லது நீங்கள் அறிந்தால் இதுபோன்ற சம்பவங்கள் இருந்தால் அதைப் பற்றி கமெண்டில் பதிவிடவும்.


No photo description available.
All reactions:
201

Comments

Popular posts from this blog

Boost Your Knowledge! DID YOU KNOW?